தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டுத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.

16 April 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அவற்றைக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஆற்றல் ஆளுநருக்கு இல்லை என்பதை மொத்த இந்தியாவும் அறிந்துகொள்ளும்படி செய்து மாநில உரிமைகளின் காவலராகவும், கூட்டாட்சித் தத்துவத்துக்கான வலிமையான குரலாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை இன்று நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன், இந்தச் சாதனைக்காக தனது உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

‘ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாநில உரிமைகளைக் காப்பதில் சாம்பியனாகத் திகழும் உங்களைக் கொண்டாடவே நேரில் வந்தேன்’ என தனது மகிழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தமைக்காகவும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வரும் சட்டப் போராட்டங்களுக்காகவும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரலும் ஒலிக்கும்படி நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமுன்வடிவிற்கும்
திரு. கமல் ஹாசன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. ஏ.ஜி. மெளரியா மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

- முரளி அப்பாஸ்,
மாநிலச் செயலாளர் - ஊடகம் & செய்தித்தொடர்பு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF



Recent video







Share this post