மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கருத்துகளுக்கு எதிராகவும், மக்கள் நலனைப் பாதுகாக்கும் முடிவுகளுக்கு எதிராகவும் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இனியும் தமிழகத்தில் ஆளுநராகத் தொடரக் கூடாது.
‘‘மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம்’’ என்று ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக, மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மக்கள் நீதி மய்யம் இதைப் பார்க்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு அறிவிப்பது ஒருவகையான மோதல் என்றால், சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் பற்றிய ஆளுநரின் பொறுப்பற்ற கருத்து மற்றொரு வகையான மோதல்.
பல்வேறு விஷயங்களிலும் பிரச்னைகளை ஏற்படுத்தி, மாநில மக்களைப் பதற்றத்திலேயே வைத்துக்கொள்ள மத்திய அரசு முயல்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
எனினும், இதுபோன்ற பல பிரச்னைகளைக் கடந்து வந்தது தமிழ்நாட்டு மண் என்பதை ஆளுநரும், மத்திய அரசும் உணர வேண்டும்.
பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆளுநர், தற்போது அரசியல் சட்ட வரையறைகளையும், மாண்புகளையும் மீறி கருத்துகளைத் தெரிவித்து வருவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் பேசியும், செயல்பட்டு வரும் ஆளுநரை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக மாண்புகளைக் கேள்விக்குறியாக்கும் பொறுப்பற்ற ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
- A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு),
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்
Social Media links
Twitter: https://twitter.com/maiamofficial/status/1644932625973522433?t=kRudxW-GpTGz0zZTD_cIrw&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02beGYgjZxu8LDKjkPnUFJovMsgyZUYeWs7NPFuuSSCyez6vRuNDHf7ex1koRhPea3l&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CqzaiCPv-44/?igshid=YmMyMTA2M2Y=