மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் பாராட்டு

21 மார்ச், 2023

                `

மாணவர், இளைஞர், மகளிர் நலன்களை மையப்படுத்தி. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை! 

மக்கள் நீதி மய்யம் பாராட்டு ! பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அறிக்கை.


மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களை மையப்படுத்தி, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதலே கல்வி, விளையாட்டுத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்கள், இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. அதேபோல, மகளிரின் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அமைந்துள்ளது. 

நாட்டிலேயே முதல்முறையாக இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை முன்னெடுத்தவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள். பல ஆண்டுகளாக அவர் வலியுறுத்தி வந்த கோரிக்கையை ஏற்று, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

மாணவ, மாணவிகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. அதேபோல, பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்குத் தாயாராகும் இளைஞர்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை, சென்னையில் சர்வதேச தரத்தில் உலகளாவிய விளையாட்டு மையம், அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவருவது ஆகியவை மாணவர்களின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது.

ரூ.420 கோடியில் சிப்காட் பூங்கா, காலணி தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்சாலைகள், கைத்தறிப் பூங்காக்கள், ஜவுளிப் பூங்கா ஆகியவை மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. புதிய சாலை, மேம்பாலத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண உதவும். சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கியுள்ளது அவசியமானது. 

அதேபோல, வரும் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா, இலக்கியத் திருவிழா நடத்துவது, சர்வதேச புத்தகக் கண்காட்சி, சென்னை சங்கமம் கலை விழாவை மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்துவது, தஞ்சாவூரில் சோழ அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவிப்புகள் கலை, இலக்கிய ஆர்வலர்களை மகிழ்விக்கும்.

மொத்தத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், எதிர்காலத் தலைமுறையை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் பாராட்டுத் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், சேவை உரிமைச் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது முதல்வரின் முகவரி திட்ட நோக்கத்தை நிறைவேற்ற பேருதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Download PDF

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post