உயிரே உறவே தமிழே,
வணக்கம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், எனது அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை, அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் ‘முதல்வரின் கலைக்களம்’ எனும் பெயரில் மனதிற்கு மகிழ்வூட்டும் கலைத் திருவிழாவாகவும், நாவிற்கு மகிழ்வூட்டும் உணவுத் திருவிழாவாகவும் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த மூன்று நாட்கள் திருவிழாவைத் துவக்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் எழுதிய சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ வாசித்துவிட்டு நான் சொன்ன ஒரு கருத்தை பொருத்தப்பாடு கருதி மீண்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
திருமணமான ஐந்தே மாதங்களில் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் பட்ட இன்னல்களை சிட்டி பாபுவின் சிறை டைரி, தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் ஆகிய நூல்களில் வாசித்து கண்கள் கசிந்திருக்கிறேன். அன்று துவங்கி இன்று வரை நீளும் கல்லும் முள்ளுமான கடினமான பயணத்தில் தன் உழைப்பினாலும், திறமையினாலும் தானும் உயர்ந்து தமிழகத்தையும் உயர்த்துகிறார் திரு. ஸ்டாலின்.
தமிழ்நாடு இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான முன்னோடியாக ஆகியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பட்டியலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. போதாக்குறைக்கு விளையாட்டிலும் மாண்புமிகு துணை முதல்வர், தம்பி திரு. உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நண்பர் திரு. ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, ஹிந்துத்துவ கொள்கைகளையும் ஹிந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக திரு. ஸ்டாலின் திகழ்கிறார்.
தமிழ் மொழியையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் அரும் பணியில் தன்னை தளராது ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்களை மீண்டும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
இந்தக் கொளத்தூர் தொகுதி முதல்வரின் மனதிற்கு நெருக்கமான தொகுதி என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவர்தான் கொளத்தூரைத் தனித் தாலுகாவாக மாற்றினார். முதல்வர் படைப்பகம், பெரியார் மருத்துவமனை என அவர் கொளத்தூர் மக்களுக்குச் செய்தவை ஏராளம்.
தங்களது கலைத்திறமையால் மக்களை மகிழ்விக்க வந்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களை வாழ்த்துகிறேன். மகளிர் சுய உதவிக்குழுவினர் இங்கே ஸ்டால்களை அமைத்து சுவையான உணவு பரிமாறுகிறார்கள். தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் திரு. சேகர் பாபு. அவருக்கு என் பாராட்டு.
மாநிலங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் சகோதரி கனிமொழி, நண்பர்கள் திரு. தயாநிதி மாறன், திரு. கலாநிதி வீராசாமி ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்பு.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், என் உயிரும் உணர்வுமான மக்கள் நீதி மய்யத்தின் உறவுகளுக்கு என் வணக்கமும்
வாழ்த்தும்.
நாளை மகளிர் தினம்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்கிற பாரதியின் வரியை நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.